கோடைக்கால சருமப் பராமரிப்பு

வெப்பநிலை அதிகரிப்பதால் சருமம் பாதிப்படைவது இயல்பு. இதனால் வெப்பமான மாதங்களில் இயல்பான பராமரிப்பு போலன்றி, சருமத்துக்குச் சற்றே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பொதுவான சருமப் பாதிப்புகள்

அதிகமான சூரிய வெப்பமும் காற்றின் தன்மையும் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

வியர்வை சுரப்பு அதிகரிப்பதால் சருமத்தின் துளைகள் அடைபட்டு, அதனாலும் சருமம் பாதிப்புக்கு இலக்காகும்.

இதனால் சிலருக்கு சருமம் வறண்டு எரிச்சல் உண்டாகலாம். சிலருக்கு வெப்பப் புண், சருமம் கருமையாதல் போன்றவை உண்டாகும்.

மேலும் சிலருக்கு வியர்வையிலுள்ள நுண்ணுயிரிகளினால் பூஞ்சை உள்ளிட்ட தொற்று பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அன்றாட சருமப் பராமரிப்பு

வெயில் நாள்களில் அடிப்படை பராமரிப்பாக நாம் மேற்கொள்ள வேண்டியது ‘சன்ஸ்க்ரீன்’ பயன்பாடு. குறைந்தது எஸ்பிஎஃப் 50 உள்ள ‘சன்ஸ்க்ரீனைப்’ பயன்படுத்துவது அவசியம்.

வெயில் நாள்களில் சருமத்துக்கு இலகுவான, ‘ஜெல்’ அல்லது நீர் அடிப்படையிலான ஈரப்பதமூட்டிகளைப் (மாய்ஸ்ட்ரைசர்) பயன்படுத்துவது சிறந்தது. இது சருமத்தில் பிசுபிசுப்பு ஏற்படுத்தாமல் வறட்சியிலிருந்து காக்கும்.

வெயிலின் தாக்கத்தால் உதடு கருமையடைவதைத் தவிர்க்க, எஸ்பிஎஃப் 15க்குமேல் உள்ள ‘லிப் பாம்’ பயன்படுத்துவது நன்று. பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துவதும் நல்லது.

சரும அழுக்குகளை அகற்றி பொலிவு கூட்ட, அவ்வப்போது முக ‘ஸ்கிரப்’ பயன்படுத்தி ‘எக்ஸ்ஃபோலியேஷன்’ செய்யலாம். சருமத்தின் தன்மைக்கேற்ற ஸ்கிரப்பைத் தேர்வுசெய்து வாரத்திற்கு ஒருமுறை இதனைச் செய்வது, சருமத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். இது சருமத்தில் உள்ள இறந்த உயிரணுக்களை அகற்றி சரும நலனைக் காக்கும்.

பொதுவாக கோடைக் காலத்தில் சருமத்துக்கேற்ற ‘கிளென்சிங்’, ‘டோனிங்’, ‘மாய்ஸ்ச்சரைசிங்’, ‘சன்ஸ்க்ரீன்’ ஆகிய நான்கையும் சரியாகப் பயன்படுத்தினால், முக சருமத்தை மென்மையாகப் பாதுகாக்கலாம்.

சருமத்தின் வகைகளுக்கேற்ற பராமரிப்பு முறைகள்

ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட சருமத் தன்மை இருக்கும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம், வறண்ட சருமம் ஆகிய இரண்டும் எதிரெதிர் குணங்கள் கொண்டவை. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, சமநிலை கொண்ட சாதாரண சருமம் பலருக்கு இருக்கும். சிலருக்கு அதீத உணர்வுத் திறன் (Sensitive) கொண்ட, எளிதில் தொற்று ஏற்படக்கூடிய சருமமாக இருக்கும்.

இதில் ஒருவரது சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என அறிவதுதான் சருமப் பாதுகாப்பின் முதல் படி.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம்

கோடைக் காலம் இவ்வகை சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

முகத்தை வெறும் நீரால் கழுவுவது சிறந்தது. நாளொன்றுக்கு ஓரிரு முறை, ‘ஆயில் ஃப்ரீ’ எனும் எண்ணெய்ச் சருமத்துக்கேற்ற ‘ஃபேஸ் வாஷ்’ பயன்படுத்துவது நல்லது.

முகத்திலுள்ள எண்ணெய்ப் பசையை நீக்க, அவ்வப்போது தயிரில் கடலை மாவு சேர்த்துப் பூசி முகம் கழுவுவது சருமப் பளபளப்பைக் காக்கும்.

ஓட்ஸ் எண்ணெய்ப் பசையை நீக்க பயன்படுகிறது. ஓட்ஸைப் பொடியாக்கி அதில் தயிர், தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வரலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவில் எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தடவலாம்.

பாலாடை, முல்தானிமட்டி ஆகியவற்றைக் கொண்டு அவ்வப்போது ‘ஃபேஸ் பேக்’ போட்டு வருவது முகத்தைப் பளிச்சென மாற்றும்.

தக்காளியில் இருக்கும் ‘செலிசைலிக்’ அமிலம், எண்ணெய்ப் பசையினால் முகப்பரு, கட்டிகள் ஏற்படாமல் காக்கிறது. தக்காளிச் சாற்றை வட்ட வடிவில் தடவி, பின் கழுவி வருவது நன்மையளிக்கும்.

எப்போதும் எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சுவதற்கு ‘ஃப்ளாட்டிங் பேப்பரைப்’ பயன்படுத்துவது சிறந்தது.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் முகத்தை அவ்வப்போது கைவிரல்களால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வறண்ட சருமம்

கோடைக் காலம் எண்ணெய்ப் பசையை அதிகரிப்பது போன்றே, சூடான காற்று, வறண்ட சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யவும் வாய்ப்புள்ளது.

இது சருமத்தில் செதில்களை உண்டாக்குவது, கருமை படரச் செய்வது, வெடிப்புகள், வெள்ளைத் திட்டுகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

நான்கு பாதாம் பருப்புகளைப் பாலில் சேர்த்து அரைத்து, சருமத்தில் பூசி, காய்ந்தவுடன் கழுவுவது முகத்தைப் பளபளப்பாக்கும்.

அவ்வப்போது ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஏதேனும் ஒன்றை முகத்திலும் உடலிலும் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால், வறண்ட சருமத்தை பாதிப்பிலிருந்து காக்கலாம்.

வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்துவதும் சரும வறட்சியைக் குறைக்க உதவும்.

பச்சைப் பயறு மாவு அல்லது கடலை மாவில், கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ் தூள் கலந்து முகத்திலும், உடலிலும் பூசி குளிப்பது வறண்ட சருமத்தை மென்மையாக்கும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய்ப் பசை, ‘மாய்ஸ்ட்ரைசர்’ கொண்ட சோப்பு, ஃபேஸ் வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

அதிக உணர்திறன் கொண்ட சருமம்

உணர்திறன் அதிகமுள்ள சருமம் கொண்டவர்களுக்குச் சட்டெனத் தொற்று ஏற்பட்டு சருமம் எளிதில் பாதிப்புக்குள்ளாகும்.

கோடைக்கால வியர்வை இவ்வகை பாதிப்புகளை அதிகரிக்கிறது.

கோடைக்காலத்தில் இவ்வகை சருமத்துக்கு சிறந்த மருந்து குளிர்ந்த நீர். தினமும் இருவேளை குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம். இது, வியர்வையால் சருமத்தில் சேரும் கிருமிகள், நுண்ணுயிரிகளால் உண்டாகும் நச்சுத்தன்மையை நீக்கி தொற்று ஏற்படாமல் காக்கும்.

குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு குளிப்பது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இவ்வகை சருமத்தினர் கற்றாழையுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் பூசலாம்.

தொற்று அல்லது ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவது சிறந்தது.

சமநிலையான, சாதாரண சருமம் கொண்டவர்கள் கோடைக் காலத்தில் சில எளிய பராமரிப்பு முறையைப் பின்பற்றினாலே சருமத்தைப் பாதுகாக்கலாம்.

சருமத்தின் மென்மையைக் காக்க சிறந்தது பால். முகத்தில் பால் தடவி, காய்ந்தபின் முகம் கழுவுவது சருமத்துக்கு நன்மை பயக்கும்.

கற்றாழை, வெள்ளரி, தயிர் ஆகியவற்றை முகத்தில் தடவி பின்னர் குளிப்பது சருமத்தை கோடைக்கால பாதிப்புகளிலிருந்து காத்து முகத்திற்கு பொலிவூட்டும்.

வெப்பமான மாதங்களில் சருமத்துக்குச் சற்றே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கோப்புப் படம்: இந்திய ஊடகம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!