இளம் வயதில் கர்னல் பதவியை எட்டிய ஆனந்த் சத்தி குமார்

‘விட்டிலைகோ’ எனப்படும் சரும பிரச்சினை தனது நான்கு வயதில் முதலில் கண்டறியப்பட்டபோது, ஆனந்த் சத்தி குமார் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

எந்த மருந்தாலும் இந்த நிலையை மாற்ற முடியாது என்றும் ஆரோக்கியமாக இருக்கும் யாருக்கும் இந்த நிலை வரலாம் என்றும் மருத்துவர் கூறியதை நினைவுகூர்ந்தார் ஆனந்த் சத்தி குமார்.

கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றி வரும் 45 வயதாகும் கர்னல் ஆனந்த், உணர்த் தாக்குதல் தலைமையகப் பிரிவின் 6ஆம் பிரிவுக்கான தளபதியாக உள்ளார்.

“விட்டிலைகோவை என்னில் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். அது எந்த வகையிலும் என் தன்னம்பிக்கையைப் பாதிக்கவில்லை. கண்ணாடி முன் நின்று பார்க்கும்போதுதான் நான் மற்றவர்களைவிட வித்தியாசமாகத் தோன்றுகிறேன். என் மனைவியும் மகனும் விட்டிலைகோ இல்லாத ஆனந்தை தங்களால் பார்க்க முடியாது என்றனர். என் மேல் முதலில் நம்பிக்கை வைப்பதுதான் மிக முக்கியம்,” என்றார் கர்னல் ஆனந்த்.

ராணுவத்தில் கர்னல் ஆனந்த் இத்தகைய உச்சத்தை எளிதில் அடையவில்லை. சிறுவயதிலேயே பெற்றோருக்கு நிதிச்சுமையை அளிக்கக் கூடாது என்பதற்காக ஒன்பது வயதிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை தனது அண்ணனுடன் சேர்ந்து குடியிருப்பு வட்டாரத்தில் வீடு வீடாகச் சென்று செய்தித்தாள்களை விநியோகித்து வந்தார். அதன் பின்னர்தான் அவர் பள்ளிக்குச் செல்வார்.

16 வயதில் பலதுறைத் தொழிற்கல்லூரிச் செலவுகளுக்காக அவர் ராணுவத்தில் சேர்ந்தார். நிபுணத்துவப் பயிற்சியில் சிறப்பான தேர்ச்சி கண்ட அவர் பயிற்சி அதிகாரி பள்ளிக்குச் சென்று அங்கு சமிக்ஞை பிரிவு ஆணை பெற்ற அதிகாரியானார்..

பின் தனது பிரிவில் உச்சத் தேர்ச்சியடைந்த ஆனந்துக்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாட்டில் இளநிலைப் பட்டம் படிக்க கல்வி விருது கிடைத்தது.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் சிறந்த செயல்திறன் படைத்த ஆனந்த், 39 வயதில் கர்னல் பதவியை எட்டினார். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. மண்டாய் ஹில் முகாமில் 20,000 ராணுவ வீரர்களுக்குத் தலைமைதாங்குகிறார் இவர்.

“பல ராணுவ வீரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். நாட்டுக்காகவும் சிங்கப்பூரர்களுக்காகவும் ராணுவ வீரர்களாகிய நாம் அயராமல் உழைக்கிறோம். கொவிட்-19 காலத்தின்போது சுகாதார அமைச்சுடன் கைகோத்து சிங்கப்பூர் ராணுவம், பொதுமக்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டியது,” என்று தன்னடக்கத்துடன் கர்னல் ஆனந்த் சொன்னார்.

வேலைப் பயிற்சிக்காகப் பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கர்னல் ஆனந்த், அதன் மூலம் வாழ்க்கைப் பாடங்களை அதிகம் கற்றுள்ளார். “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சிங்கப்பூரர் எனும் அடையாளம் என்னுள் அதிகம் வெளிப்படும். சிங்கப்பூரில் நாம் வசதியாக வாழ்கிறோம். சில நாடுகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. சிங்கப்பூர்மீது நன்றியுணர்வு அதிகம் கொண்டுள்ளேன்,” என்றார் கர்னல் ஆனந்த்.

நாள்தோறும் அதிகாலை நான்கு மணிக்குத் தனது நாளை தொடங்கும் கர்னல் ஆனந்த், உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு அந்த நாளுக்கான பொறுப்புகளைக் கையாளத் தொடங்குவார்.

பணி மாலை ஆறு மணிக்கு முடிந்தாலும் அவர் இரவு எட்டு மணி வரை அலுவலகத்தில் இருந்து சக ஊழியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வீட்டுக்குச் செல்வார்.

12 வயது மகனுக்குத் தந்தையான கர்னல் ஆனந்த் வீட்டில் செலவிடும் நேரம் குறைவாக இருப்பதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்கும் மகனுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறார். வாரயிறுதிகளில் மகனுடன் அதிக நேரம் செலவிடுவதாகச் சொல்கிறார்.

“என் பணியைப் பற்றி என் மகன் அதிகம் கேள்விகள் கேட்பான். ராணுவ வாழ்க்கை பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். என் ராணுவ நண்பர்கள் என் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அதனால் மகனுக்கு இந்த வேலை எவ்வளவு சவால்மிக்கது என்பது நன்றாகத் தெரியும். வருங்காலத்தில் ராணுவத்தில் சேர அவனுக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்டபோது அவன் இப்போதைக்குத் தெரியவில்லை என்றான்,” என்று கர்னல் ஆனந்த் தெரிவித்தார்.

ராணுவத்தில் சேர விரும்பும் இளையர்கள் அப்பணி சவால்மிக்கதாக இருந்தாலும் அது திறன்களை வளர்க்கும் சூழல் கொண்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இப்பணியில் குழுக்களாக சேர்ந்து செயல்படும் பொறுப்புகள் அதிகம் இருப்பதால் அதை விரும்புபவர்களுக்கு ராணுவம் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று கர்னல் ஆனந்த் நம்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!